articles

img

தேசத்தின் பொதுத்துறைச் சொத்துக்கள் விற்பனை.... ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக பாஜக அரசு....

சாதாரண நிலையில் அரசாங்கத்திற்கு வருமானத்திற்கான வழிகள் என்பது வரிகள் மற்றும் வரிகள் அல்லாத வருவாய் இனங்களும் கடன்களுமாகும். ஆனால், நவீன தாராளமயப் பொருளாதாரக் காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு முக்கிய வருமானம் பொதுத்துறைகளையும் பொதுச்சொத்துக்களையும் விற்பதன் மூலம் கிடைக்கிற வருமானமாக மாறுகிறது. பிரிட்டனில் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர்தான் ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி உலகை அதிர்ச்சியுறச் செய்தார்.
இந்தியாவில் 1991 முதல் பொதுத்துறைகளை விற்பது வருமானத்திற்கான ஒரு முக்கிய மார்க்கமாக ஒவ்வொரு பட்ஜெட் உரையிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தொழிற்சங்கங்களின், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் விளைவாக ஆட்சியாளர்களுக்குத் தங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப தனியார்மயத்தை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளில் தனியார்மயமாக்கல் மூலம் ஒன்றிய அரசு மொத்தம் ரூ.4,82,699 கோடி அளவுக்குப் பொதுத்துறைச் சொத்துக்களை விற்பனை செய்துள்ளது. இதை 2019-ஆம் ஆண்டின் நிலையான விலையின்படி கணக்கிட்டால் ரூ.6,72,526 கோடி வரும். 1990களில் ரூ.18,480 கோடி அளவுக்கு பங்குகள் விற்கப்பட்டதென்றால் கடந்த பத்தாண்டில் ரூ.58,488 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. அது மூன்றாவது பத்தாண்டில் ரூ.4,05,731 கோடியாக அதிகரித்தது.தனியார்மயத்தைத் துவக்கி வைத்தது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பங்குகள் விற்பனையின் 75 சதவீதமும் நடந்தது என்டிஏ (பாஜக கூட்டணி) அரசின் காலத்தில்தான். நிலையான விலையில் கணக்கிட்டால் காங்கிரஸ் அரசுகளின் விற்பனை 37 சதவீதமாக உயரும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நவீன தாராளமயக் காலகட்டத்தில் காங்கிரஸின், பாஜக-வின் கொள்கைதான் தனியார்மயம் என்பது. ஆனால், இப்போது தனியார்மயம் புதியதொரு பரிமாணமும் பெற்றுள்ளது.

பொதுச்சொத்துக்கள் விற்பனை
இரண்டாம் பாஜக அரசின் கடந்த பட்ஜெட்டில் வழக்கம் போல் அதிக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்றும், அதன் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரட்டப்படும் என்றும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் அறிவித்தார். அத்துடன், நெடுஞ்சாலைகள், கனிம வளங்கள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலான தேசத்தின் பொதுச்சொத்துக்கள் ‘பணமாக்கப்படும்’ (Moretisation) என்றும் அறிவித்தார். அதிகமானோர்க்கும் இது என்னவென்று புரியவில்லை. இதோ, இப்போது இரண்டாவதாகச் சொன்ன விஷயம் உண்மையாகிறது. 

மோடி அரசு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசத்தின் சொத்துக்களை விற்பனைக்கு வைத்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையமும் இவற்றில் உள்படும். தேசிய நெடுஞ்சாலை (1.6), ரயில்வே (1.5), மின்சார விநியோகம் (0.45), மின்சார உற்பத்தி (0.40), தொலைத்தொடர்பு (0.35), நிலக்கரி (0.29), வேர்ஹெளஸ் (0.29), இயற்கை எரிவாயு (0.25), எரிபொருள் பைப் லைன் (0.23), விமானப் போக்குவரத்து (0.21), ரியல் எஸ்டேட்(0.15), துறைமுகம் (0.13), விளையாட்டு மைதானங்கள் (0.11). அடைப்புக் குறிக்குள்  இருப்பவை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளவையாகும். இவற்றின் மொத்தம் 6 லட்சம் கோடி. ரூபாய். 

இது சொத்து விற்பனை அல்ல என்று ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் சத்தியமிட்டுச் சொல்கிறார். பொதுத்துறை கம்பெனிகளைத் தனியார்மயம் ஆக்குவதன் மூலம் பங்குகள் விற்கப்படுகின்றன. அத்துடன் அவற்றின் உரிமை, புதிய பங்குகளது உரிமையாளர்களின் வசம் ஆகிவிடும். ஆனால் இங்கு அதுவல்ல. மாறாக, அவற்றின் விலை மதிப்பைப் பணமாக மாற்றுவது மட்டுமே செய்யப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட கால அளவு முடிந்தால் இந்தச் சொத்துக்கள் மறுபடி அரசாங்கத்திற்குக் கிடைத்துவிடும். இந்தப் புதிய முறையைக் குறிப்பிடும் பெயர்தான் ‘மானிட்டைஸேஷன்’  (பணமாக்கல்) இது நமக்குப் பரிச்சயமில்லாத ஒரு தனியார்மய முறையாகும். அது என்ன புதிய முறை -– புதிய சம்பிரதாயம்?

தனியார்மயத்திற்கு ‘பணமாக்கல்’ எனும் பாதை
அரசு இப்போது அறிவித்துள்ள சொத்துக்களின் மதிப்பு அல்லது விலை எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டுள்ளது. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால் 6 லட்சம் கோடி ரூபாய் வரும். அரசு இனி ஒவ்வொரு பொதுச்சொத்துக்கும் டெண்டர் விடும். மிக அதிக விலை தருவதற்குத் தயாராக உள்ள தொழில்முனைவோர்க்கு சொத்துக்களை மேற்பார்வையிடவும் அவற்றை இயக்கவும் அதிக முதலீட்டுக்கான உரிமையும் கைமாறும்.ரூ.1000 கோடி மதிப்புள்ள சில ரயில்வே நிலையங்களும், அவற்றின் நிலங்களும் 30 ஆண்டுகளுக்கு இவ்வாறு டெண்டர் விடப்படும். டெண்டரில் ரூ.1000 கோடியைவிட அதிகமாகத் தருவதற்குத் தயாராக உள்ள தொழில் முனைவோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு உறுதி செய்யப்படும். அவ்வாறு ஒப்படைக்கும்போது என்னவெல்லாம் நிபந்தனைகளாக உள்ளன என்பது இப்போதுவரை தெளிவாக்கப்படவில்லை. தொழில்முனைவோர்க்கு புதிய முதலீடுகளுக்கான உரிமை என்னவெல்லாம் இருக்கும் என்பதும் தெளிவாக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் மிகவும் தெளிவு. இப்போது அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிற ரூ.1000 கோடியும், அதற்கான வட்டியும் புதிய முதலீட்டு லாபத்தின் மூலமாக முப்பது ஆண்டுகளுக்குள் முதலெடுக்க முடியுமா என்று தொழில் முனைவோர் இயல்பாகவே கணக்குப் பார்ப்பார் அல்லவா? ரயில்வே நிலையத்தில் ‘யூஸர்ஃபீ’ (பயனாளர் கட்டணம்) அதிகரிக்கலாம்; ரயில்வே நிலத்தில் ஹோட்டல்கள் கட்டலாம். லாபம் சம்பாதிப்பதற்கு இவ்வாறு பலவும் செய்யலாம். இவ்வாறு இருந்தால் ரயில் பயணிகளுக்கும் ரயில் பயனாளர்க்கும் பெரும் சுமை ஏற்படும் என்பது இதன் பொருள். 

இவ்வாறு 30 ஆண்டுகள் முடிந்தால் சொத்துக்கள் திரும்பி அரசாங்கத்திற்கு வரும் என்று ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால், தொழில் முனைவோர் முதல்போட்ட புதிய சொத்துக்களின் விலையை தொழில்முனைவோர்க்குத் அரசு தரவேண்டியது வருமல்லவா? 1000 கோடி ரூபாய் முதல்போட்டது வசூலாகிற விதத்தில் யூஸர்ஃபீக்களை (பயனாளர் கட்டணங்களை) செங்குத்தாக உயர்த்துவதற்கு அனுமதியில்லை என்று நிபந்தனை விதித்தால் அரசுக்குக்கிடைத்த பணத்தை திரும்பித் தருகிற பொறுப்பு அரசுக்கு இருக்கிறதல்லவா? இவ்வாறு தொழில் முனைவோர்க்கு அவர் முடக்கிய சொத்துக்களின் விலையையும் மற்றவற்றையும் திருப்பித் தரவேண்டுமென்றால் அதற்கு பணம் அரசுக்கு எங்கிருந்து கிடைக்கும்?

‘மானிட்டைஸேஷன்’ பலவிதம்
‘மானிட்டைஸேஷன்’ என்கிற பணமாக்கலுக்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று: இந்தத் தொழில் முனைவோர்க்கே காலஅளவை நீட்டித்துத் தருவது. எடுத்துக்காட்டாக, 30 ஆண்டுகள் என்று உள்ளதை 90 ஆண்டுகள் என்று காலஅளவை நீட்டித்துத் தரலாம். இதனால், பணத்தைத் திருப்பித் தருவதில் முறை தவறுவதிலிருந்து தப்பிக்கலாம். இரண்டாவது வழி: இந்தச் சொத்தை மீண்டும் ஏலத்திற்கு விடலாம். அவ்வாறு கிடைக்கிற பணத்தை வைத்து தொழில் முனைவோர்க்கு அவர் போட்ட பணத்தைத் திருப்பித் தரலாம். மூன்றாவது வழி: அதுவும் இல்லையென்றால் சொத்தை அவர்களுக்கே விற்றுவிடலாம்.

மேலே விவரிக்கப்பட்டவை நேரடியான ஒப்பந்த முறையாகும். முன்பு விவரித்தது போல முழு பணமும் ஒரேயடியாக முதல் தவணையிலேயே வாங்கலாம். அல்லது பல தவணைகளாக வாங்கலாம். அதுபோலவே  Structured Finance Approch    என்றொரு முறையும் உண்டு. இங்கே சொத்தின் மதிப்பை செக்யூரிட்டிகளாக்கி விற்கப்படுவது. அந்தப் பணத்தைப் பயன்படுத்தி முதலீடு செய்கிறார்கள். மதிப்பு அதிகரிக்கும்போது அதன் பலன் செக்யூரிட்டியின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும். இதுபோலவே பல முறைகள் உண்டு. ஆனால், இப்போது ஒன்றிய அரசு உத்தேசிப்பது நேரடியான ஒப்பந்த முறை என்று தோன்றுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் இருந்துதான் எடுப்பார்கள்
இவ்வாறு, ஒன்றிய அரசுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் முன்கூட்டியே வழங்கவிருக்கிற முதலாளிகளுக்கு இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும்? சிறியதொரு அளவு அவர்களின் சொந்த சம்பாத்தியத்திலிருந்து கிடைக்கலாம். மீதிப் பணம் வங்கிகளிலிருந்து கடன் பெறுவதிலிருந்து கிடைக்கும். வங்கிகளிலிருந்து மிகப் பெருமளவு தொகை அரசாங்கத்தின் சொத்தையே ஈடாக வைத்து கடன் வாங்கித் தருவார்கள். இறுதியில் அரசாங்கத்தின் சொத்து நடைமுறையில் அவர்களுக்கே சொந்தமாகிவிடும்.

இதை அரசாங்கமே செய்யலாமல்லவா? அரசாங்கம் வங்கியிலிருந்து கடன் வாங்கி முதலீடு செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் கணக்கு வைப்பதில் சில சிரமங்கள் உண்டாகும். அரசாங்கத்தின் பட்ஜெட்டில் இது அரசாங்கத்தின் கடனாக வரும். நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். அதை அந்நிய மூலதனம்  கொஞ்சமும் விரும்பாது. அந்நிய முதலீட்டாளர்கள் தகராறு செய்தால் பொருளாதார நிலைமை நெருக்கடிக்குள்ளாகும். ஆனால், தனியார் தொழில் முனைவோர் வங்கியில் கடன் வாங்கி அரசாங்கத்திற்குக் கொடுத்தார்களென்றால் அது கடனாக ஆகாது. அது இதர மூலதன வருமானமாகக் காட்டப்படும். இது நிதிப் பற்றாக்குறையை உண்டாக்காது. அந்நிய மூலதனத்தையும் சந்தோசப்படுத்தும்.இன்றைய பாஜக அரசின் ‘வளர்ச்சித் தந்திரம்’ இதுதான்: அந்நிய மூலதனத்தை மேலும் மேலும் அதிகமாகச் சார்ந்து பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பது போலக் காட்டுவது. அதற்காக என்னவெல்லாம் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமோ அவற்றையெல்லாம் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசத்துடன் பின்பற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அத்துடன் இந்திய முதலாளிமார்களுக்கும் அதிக சந்தோசம். பொதுத்துறைக் கம்பெனிகளும், தேசத்தின் பொதுச்சொத்துக்களும் குறைந்த விலைக்கு அவர்களின் கைக்குப் போய்ச் சேருகிறது. நவீன தாராளமயக் காலத்தில் பாரம்பரியமான மூலதனத் திரட்சி -– அதாவது பொதுச்சொத்துக்கள் வஞ்சனையாகப் பறிபோவது நடந்து கொண்டிருக்கிறது. இந்த மூலதனக் கொள்ளையின் மிகக் கோரமான முகத்தை பாஜக அரசு வெளிப்படுத்துகிறது.

நன்றி: சிந்தா-மலையாள வார இதழ் (3.9.2021), 

தமிழில்: தி.வரதராசன்
 

;